குழந்தைப் பேறு அருளும் திருவாலங்காடு திருத்தலம்

திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் பற்பல நற்பேறுகளை வேண்டும் அபிராமிபட்டர் ‘கலையாத கல்வியும்,குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும்’ வேண்டும் என்கிறார். தான் கேட்டதில் எது தவறினாலும் பரவாயில்லை, ஆனால் சந்தான பாக்கியம் என்படும் குழந்தைப் பேறு தவறாமல் கிடைக்க வேண்டும் என்கிறார் அவர்.

திருமணத்துக்குப் பிறகு மூன்று மாதத்தில் இருந்தே கணவனிடமும், மனைவியிடமும் ஊரார், உறவினர்கள் கேட்கும் கேள்வி ‘விசேஷம் ஏதாவது உண்டா?’ என்பது தான். இங்கு விசேஷம் என்றால் புத்திர பாக்கியம். சிலருக்கு உடனே கிட்டும். பலருக்கும் தற்போதைய உணவு பழக்க முறையாலும், கர்ம வினைகளாலும், சாபங்கள், தோஷங்களினாலும் புத்திரபாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

ஆண்களில் பலருக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும்பாலும் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றது. அதுபோல மாதவிலக்கில் தடைகள், கருமுட்டை உருவாவதிலுள்ள தடைகள், குழாயில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்சினைகள் பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களாக இருக்கின்றது.

அதே வேளையில் ‘கண்டிப்பாக குழந்தைப்பேறு கிடைக்கும்’ என்கிறது ஆலய தல புராணம் ஒன்று. ஆம்! அந்த ஆலயமே ‘திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்.

tvg

திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டத் திருக்கோவில் இது. மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலம் தாண்டி 2 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு உள்ளது. திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள ஈசனின் ஊர்த்தவ நாட்டியம் நடந்த, காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பது தான். அதே போல் அன்னையின் திருநாமமும் வண்டார் குழலம்மை என்பதே.

நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ்வர தீர்த்தம் ஆகும். இங்கு நீராடி, இத்தல ஈசனையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்துதான் அதிதி என்பவர், தேவர்களைப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இந்திரன் இத்தல தீர்த்தத்தில் நீராடி, தன் மகன் ஜெயந்தனை பெற்றானாம்.

பரதன் என்னும் அந்தண சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தைப்பாக்கியம் இல்லாமல் வருந்தினான். இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை உடனுறை சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு தவம் மேற்கொண்டான்.

தவத்திற்கு இரங்கிய ஈசன் அசரீரியாக, ‘பரதா! அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிசேகம், அர்ச்சனை செய்து, கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட்டு வா. கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிட்டும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் அத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபட மலடியும் குழந்தை பெறுவாள்’ என்று அருளினார்.

thiruvalangadu_temple_11

பரதனும் அவன் மனைவியும் பங்குனி அமாவாசை நாளில் திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டனர். அதன் பயனாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது என்கிறது தல வரலாறு.

இத்தலத்தில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. பழைய அம்மன் சிலை சேதமானதால், புதிய சிலை செய்யப்பட்டது. புதிய சிலையை பிரதிஷ்டை செய்ததும், பழைய சிலையை அகற்ற முயன்றனர். அப்போது ஒலித்த அசரீரி ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது பின்னமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து வழிபடத் தொடங்கினர்.

இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் அம்பாள் சன்னிதியின் கருவறை தீபத்தில் தூய பசு நெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். இத்தலத்தில் பழைய அம்மனும் உயிரோட்டமானவள். எனவே மூலவர் வண்டார்குழலி அம்மனுக்கு செய்யும் அனைத்து உபசாரங்களையும், பழைய அம்பாளுக்கும் செய்து வரவேண்டும்.

ambikai

பழைய வண்டார்குழலி அம்மன் அருகில் தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இவருக்கு புனர்பூசம், பஞ்சமி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னதி இருக்கிறது.

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தனி சன்னிதியில் மேற்கு நோக்கிய வண்ணம் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தல மூலவர் வடாரண்யேஸ்வரரும், மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது இத்தலம் மிகச் சிறந்த பரிகார திருத்தலம் என்பதைக் காட்டுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் அமாவாசை நாட்களில் இங்கு வந்து புத்திரகாமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

ஆனாலும், புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள் பங்குனி மாத அமாவாசை நன்னாள் தான். அன்றையதினம் இங்கு வந்து இத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை மூன்றுமுறை வலம் வந்து புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம். அன்றைய தினம் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*