திருவருள் பொழியும் திரு ஆடிப்பூரம்

andal2

உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒருநாள். அவர்களது இரவுக் காலமே தட்சிணாயன காலம் ஆகும். அதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது இடது பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் இந்த காலங்களில் தான் வரும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

சைவம்

சைவ கோவில்களிலும், அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப் பூரம் பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, ஆடிப்பூரம் அன்றைய தினம் கூழ் வார்க்கும் விழா நடைபெறும்.

Thiruaadipooram

திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருள்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாள்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுரசுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லன நடக்கும்.

வைணவம்

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர்.

Sri-Andal

இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வருவது மிகவும் நன்மை தருவதாகும். மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் கொடுத்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம் தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கப் பெருமான் தேவியைக் கரம் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொண்ட திருநாளை உணர்த்தும் விதமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடித் திருவிழாவின் 7ஆம் நாள் ஆண்டாளின் மடியில் சயனித்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீ ரெங்கநாதர். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடக்கும் இந்நிகழ்ச்சி மிகவும் விசேஷமானது. இக் காட்சியை தரிசிக்கும் தம்பதியரிடையே ஒற்றுமை மேலும் பலப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*