மங்களம் அருளும் ஆடிப் பெருக்கு விரதம்

AADI-PERUKKU

தமிழ் மாதமாகிய ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையே ‘ஆடி 18’. இதனை ஆடி பெருக்கு எனவும் கூறுவர். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே இப்பண்டிகையின் நோக்கம்.

இயற்கை அன்னையை அம்மனாக பாவித்து இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழா எடுப்பர். ஆடி மாதத்தில் ஆறு, குளம், ஏரி அனைத்திலும் நீர் வளம் பெருகி இருக்கும். எனவே இம்மாதத்தில் விவசாயத்தை தொடங்குவர். இதனால் தான் ‘ஆடி பட்டம் தேடி விதை’ எனும் பழமொழியும் உண்டானது. விதை போடுவதும், நாற்று நடுவதும் இம்மாதத்தில் நடக்கும்.

தமிழகத்தின் அனைத்து நீர் வளங்களுக்கும் நன்றி சொல்லி குதுகலமாய் விவசாயத்தை தொடங்கும் இயற்கையோடு இணைந்த தமிழ் சமுகத்தின் இணையற்ற விழா எனலாம். பார்வதி (அம்மன்) தேவிக்கு அரிசியினால் பல வகையான பண்டங்களை தயாரித்து படைத்து பாட்டிசைத்து வணங்குவர்.

நீர் வளத்தை கொடுக்கும். ஆறுகளை அட்சசையும் மலர்களையும் தூவி வணங்குவர். பெரும்பாலும் இப்பண்டிகை ஆற்றங்கறைகளை ஒட்டி வாழும் மக்களே வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். அதிலும் காவிரி நதி கறை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.

மாவுவிளக்கு செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து, மஞ்சள் திரியுடன் விளக்கை ஏற்றி மாவிலையில் வைத்து ஆற்றில் பெண்கள் விடுவர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே சேர இவ்வாறு செய்யும் போது ஆற்றில் மிதந்து செல்லும் மாவிவிளக்குகள் காண்பவர்களின் நெஞ்சை மகிழ்விக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*