கருவை காக்கும் நாயகி

இறைவன் முல்லைவனநாதருடன், திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. மேலிரு கரங்களில் தாமரையும் அக்ஷமாலையும்; கீழ்க் கரங்களில் வலக்கரம் அபயம் அருள; இடக்கரம் ஊரு ஹஸ்தமாகத் தொடையில் ஊன்றப்பட்டிருக்க, புன்னகையோடு அருளும் இந்த அம்பிகையை கரும்பணையாள் என்றும் போற்றுவார்கள். கரும்பைப்போல் இனிமையானவள் என்று பொருள்.

கருவைக் காத்த கதை

நித்திருவ முனிவரின் மனைவியான வேதிகை கர்ப்பவதியாய் இருந்தாள். பசிக்கு அன்னமிட இயலாத அவளை, அவளின் நிலை அறியாமல் சபித்துவிட்டார் ஊர்த்துவபாதர் என்ற முனிவர். இதனால் வேதிகையின் வயிற்றுக் கருவுக்கு ஊனம் வர, அவள் திருக்கருகாவூர் பெருமானையும் பெருமாட்டியையும் வேண்டித் துதித்தாள். அம்பிகை கர்ப்பரட்சகியாகத் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் ஆவாஹனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி, ‘நைந்துருவன்’ என்னும் குழந்தையாகக் கொடுத்தாள் என்கிறது தலபுராணம்.

Tirukarugavur-Garbharakshambikai-Temple1

பின்னர் நித்திருவர் – வேதிகை தம்பதி, ‘இனிமேல் இத்தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த இன்னலும் வராமல் காக்க வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக்கொள்ள, அதன்படியே இன்றைக்கும் கருகாத்து அருள்பாலித்து வருகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

பிரார்த்தனைகள் பலிக்கும்

மகப்பேறு வாய்க்காத பெண்கள், இங்கே கோயில் கொண்டிருக்கும் அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமொப்பி வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை 45 நாள்கள் உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும்.

கருவைக் கொடுப்பது மட்டுமல்ல; கருத்தரித்த பெண்கள், இந்தத் தலத்து நாயகியை வேண்டி, விளக்கெண்ணெய் மந்திரித்து வயிற்றில் தடவினால், அவர்களின் கருவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் காக்கப்படுவதுடன் சுகப்பிரசவம் நிகழும்.

karparakshambikai

பிரார்த்தனை ஸ்லோகம்

‘ஸ்ரீமாதவி கானனஸ்தே – கர்ப்பரக்ஷாம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்…’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைத் தொடர்ந்து ஓதி வந்தால், சுகப் பிரசவம் நடைபெறும்.

செல்லும் வழி

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையிலுள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 7 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மி. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவிலும, இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலமாக இத்தலத்தை சுலபமாக அடையலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*