நாம் வீடுகளை சுத்தமாக வைத்திருந்தாலும், சுற்றுப்புறம் தூய்மையின்றி இருக்கும்போது, வீடுகளில் கொசுக்கள் மற்றும் பூச்சித்தொல்லைகள் ஏற்பட்டு, கொசுக்கடியினால் வேதனையும் தூக்கமின்மையும், பூச்சிகளினால் ஆரோக்கிய பாதிப்பும், அருவருப்பும் ஏற்படுகின்றன. எப்படி ஒழிப்பது இந்த தொல்லைகளை? நாம் தனி வீட்டில் வசித்தாலும் குடியிருப்புகளில்
இருந்தாலும், சில எளிய வழிகளில், வீடுகளில் மூலிகைச்செடிகளை வளர்ப்பதன் மூலம், கொசு மற்றும் பூச்சிகளை அழித்து, நிம்மதியடையலாம்.
துளசி
ஆன்மீகத்தில் மிக உயர்ந்த செடியான துளசி, மனிதர்களின் உடல் நலத்தைக் காக்கும் அருந்தன்மை நிறைந்தவை என்பதை நாமறிவோம். அவை, வீடுகளில் உள்ள பூச்சிகளையும் விரட்டும் என்பதை நாமறிவோமா? துளசிச்செடிகளை

துளசி மாடத்தில் மட்டுமன்றி, தோட்டங்களில், வீடுகளின் ஜன்னலோரங்களில் வைத்து வளர்த்து வர, கொசு மற்றும் பூச்சிகள் விலகும். மாலை வேளைகளில் வாரமொரு முறை, காய்ந்த துளசி இலைகளைக் கொண்டு, புகை மூட்டம்
வீடுகளில் இட்டு வரலாம்.
தும்பை
![]()
தும்பை, உடலுக்கு நன்மை தரும் அருமையான மூலிகை, கண் பார்வைக்கு சிறந்த வளம் தரும். தும்பைச்செடிகளை வீடுகளின் தோட்டங்கள் மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் வளர்த்துவர, பூச்சிகள் வீட்டை அணுகாது. தும்பை இலைகளை அரைத்து, உடலில் தடவி உறங்க, கடிக்க வரும் கொசுக்கள் விலகி ஒடி விடும். தும்பை இலைகளை அரைத்து, அவற்றை வெயிலில் உலர்த்தி, மாலை வேளைகளில் வீடுகளில் புகை மூட்டம் போட்டு வர, கொசுக்கள் மற்றும் பூச்சிகள்
அழிந்துவிடும்.
பேய் மிரட்டி

தும்பை செடியினத்தில் ஒன்றான பெருந்தும்பை எனும் பேய்மிரட்டி, சிறந்த கிருமிநாசினி மற்றும் கொசு விரட்டியாகும். மருத்துவ நன்மைகள் மிக்க பேய் மிரட்டி செடிகளை வீட்டின் தோட்டத்தில் வளர்த்து வரலாம், பேய் மிரட்டி இலைகளை நன்கு நீரில் அலசி, அந்த இலைகளை விளக்கு திரி போல சுருட்டி, சிறிய விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி அதில் இலைத்திரியை இட்டு பற்றவைக்க, பச்சை இலை திரி, பளிச்சென எரியும். மாலை வேளைகளில் இந்த விளக்கேற்றி வர,
வீடுகளில் உள்ள கொசுக்கள் மற்றும் நச்சுப்பூச்சிகள் விலகி ஒடிவிடும். மேலும், வீட்டில் நேர்மறை எண்ணங்களை ஓங்கச்செய்யும் ஒரு அற்புத ஒளியும்கூட, இந்த பேய்மிரட்டி திரி விளக்கு!
புதினா

புதினா, உடல் நலத்திற்கும், மன வளத்திற்கும் உற்சாகம் தரும் ஒரு வாசனை மூலிகை, இந்தச்செடியை வீடுகளில் வளர்த்துவர, பூச்சிகள் அண்டாது. இதன் வாசனைக்கு கொசு, வீட்டுப்பக்கம்கூட நெருங்காது. வீடுகளில் உள்ள கொசுக்களை ஒழிக்க, புதினாவில் இருந்து எடுக்கப்படும் மெந்தால் தைலத்தை சில துளிகள் நீரில் இட்டு, அந்த நீரை, ஒரு சிறிய ஸ்பிரேயர் மூலம், படுக்கையறையில் தெளித்துவர, கொசுக்கள் ஓடிவிடும். நூறு ரூபாய் செலவுசெய்து வாங்கி, வீடுகளில் மின்சாரத்தில் பொருத்தும் கொசு விரட்டி எண்ணைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. ஒரு ரூபாய்கூட செலவு வைக்காத இந்த மூலிகைகள், நமக்கு தரும் பலன்கள், ஏராளம். இதே போல இன்னும் சில மூலிகைச் செடிகளை, நாம் வீடுகளில் வளர்த்து வரலாம்.
பூண்டு

வெங்காயம் போலே, வேரிலே காய்க்கும் பூண்டுச்செடிகளை வீடுகளில் தோட்டங்களில் வளர்த்து வரலாம். பூண்டின் வாசத்திற்கு கொசுக்கள் காத தூரம் ஓடிவிடும். பூண்டை நசுக்கி, அந்தச் சாற்றை சிறிது நீரில் கலந்து, அதில் ஒரு சிறிய பருத்தித் துணியை நனைத்து, வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பாத்ரூம் டாய்லெட் வெண்டிலேட்டர் அருகில் கட்டி வைத்து வர, கொசுக்கள் வீட்டை எப்போதும் நெருங்காது. பூண்டுத் தைலமும் உபயோகித்து கட்டலாம்.
துளுக்க சாமந்தி செடி

மேரிகோல்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளுக்க சாமந்தி செடியை, தோட்டங்களில் வைத்துவளர்க்கலாம், வீடுகளில் வைத்தும் வளர்க்கலாம். மேரிகோல்ட் செடி மருத்துவப்பலன்கள் கொண்டவை, அழகுமிக்க இவற்றின் மஞ்சள் வண்ணப்பூக்கள், காண வசீகரமாக இருந்தாலும், இவற்றின் நறுமணம் சற்றே மூக்கைத்துளைக்கும் நெடியுடன் விளங்கும். இந்தச்செடியை வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களில் வளர்த்துவர, அவை கொசுக்களின் வளர்ச்சியைத்தடுத்து,
அழிக்கும் தன்மையுடையவை. இதர பூச்சிகள் நாளடைவில் முற்றிலும் நீங்கி விடும்.
கொசுக்களை அழிக்கும் தட்டான்கள்!

வீடுகளில் கொசு விரட்டி செடிகள் வளர்க்கத்தேவையில்லை, புகை மூட்டம் தேவையில்லை, இவை எல்லாவற்றையும் விட, வீடுகளின் சுற்றுப்புறங்களில், தட்டான்கள் அதிகம் வளரும் சூழலை உருவாக்கினாலே போதும். தட்டான்கள், கொசுக்களை முட்டைப்பருவத்திலேயே அழித்து, கொசுக்கள் பரப்பும் வியாதிகளில் இருந்து நம்மைக்காக்க வந்த, இறைக்கொடை! நாம் மறந்துவிட்டோம்!
தட்டான்கள் இன்று அழிவின் விளிம்பில்!

Leave a Reply