காளை வழிகாட்டிய திருத்தலம்!

kalayaarkovil2

யாம் இருப்பது கானப்பேர்’ என்று இறைவனே திருவாய் மலர்ந்த பெருமையுடைய ஊர் காளையார்கோவில். ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற வீர சிங்கங்களைப் பாதுகாத்த ஊர் இது. அதுமட்டுமா? ஒரே கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தரிசனம் தருவது, இந்திரனின் சாபத்தைத் தீர்த்தது, சுந்தரருக்கு ரிஷபம் வழி காட்டியது… இப்படியான புராணச் சிறப்புகளும் இவ்வூருக்கு உண்டு!

kalayaarkovil

ஊரும் பேரும்!
ஒருமுறை, சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனி நாதரைத் தரிசித்துவிட்டு காளையார்கோவில் எல்லையை வந்தடைந்தார். அங்கிருந்து நீளும் பாதை முழுவதும் லிங்கங்கள் இருப்பதை அறிந்து, அவற்றின் மீது கால்பதிக்கத் தயங்கினார். ‘இறைவா உன்னைத் தரிசிக்க முடியவில்லையே’ என்று அவர் வருந்திப் பாட, சிவனருளால் ரிஷபம் வந்தது. அது, சுந்தரர் நின்றிருந்த இடம் வரைக்கும் வந்து மீண்டும் திரும்பிச் சென்றது. தொடர்ந்து, `ரிஷபத்தின் கால் குளம்புகள் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லை; அவ்வழியே நடந்து வந்து எம்மைத் தரிசிக்கலாம்’ என அசரீரி ஒலித்தது. அதன்படியே சென்று சிவனாரைத் தரிசித்து மகிழ்ந்தார் சுந்தரர். இப்படி, காளை வழிகாட்டியதால் இவ்வூருக்கு காளையார்கோவில் என்று பெயர்.
சகஸ்ரலிங்க தரிசனம்!
காளையார்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்று சகஸ்ரலிங்க தரிசனம். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மதுரை, உத்திரகோச மங்கை, திருக் காளத்தி, ராமேஸ்வரம், காளையார்கோவில் ஆகிய தலங்களில் மட்டுமே சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது.

இந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரே நேரத்தில் 1008 லிங்கங் களைத் தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும்; பூர்வஜன்ம பாவங்கள் விலகி, அஷ்ட ஐஸ்வர் யங்களும் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.
பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான் கில் ஒன்று இது. தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது. ஸ்தல விருட்சம் மந்தாரை. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், கல்லாட தேவர், கபிலதேவர், பரண தேவர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகிய அருளாளர்களால் பாடப்பட்ட திருக்கோயில் இது.

மூன்று மூலவர்கள்
ஸ்ரீசொர்ணவல்லி அம்மன் சமேத ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர், ஸ்ரீசுந்தராம்பிகை சமேத ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீமீனாட்சியம்மை சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய மூன்று மூலவர் களும் அம்பாள்களும் ஒரே கோயிலில் அருளும் அற்புதத் தலம் இது. இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் தரிசிப்பது அபூர்வம்.

84 சதுர் யுகங்களைக் கண்டு சுயம்பு மூர்த்தி யாக அருள்கிறார் சொர்ணகாளீஸ்வரர். சந்திரனால் வழிபடப்பட்ட இறைவன் சோமேஸ்வரர். வீரசேன பாண்டிய மன்னனுக் காக மதுரையிலிருந்து இத்தலத்துக்கு வந்து காட்சியளித்தவர் மீனாட்சிசுந்தரேஸ்வரர்.
சிவபெருமானின் முகவரி
`யாம் இருப்பது காளையார்கோவில்’ என்பது சிவவாக்கு என்கிறார் சேக்கிழார். மாணிக்கவாசகரோ உத்திரகோசமங்கை திருத்தலத்தையே இங்ஙனம் குறிப்பிடுகிறார்.
‘‘ஒருவருக்கு இரண்டு ஊர்கள் இருப்பது இயற்கை. பிறந்த ஊர், பிழைப்புக்காக இடம் பெயர்ந்த ஊர் என இரண்டு ஊர்கள் தற்போது பெரும்பாலானவர்களுக்கு உண்டு. அந்த வகையில் உத்திரகோசமங்கை சிவனுக்குச் சொந்த ஊர் என்றால், திருக்கானபேர் என்றழைக்கப்படும் காளையார்கோவில் அவர் வாழ்ந்த ஊர் எனச் சொல்லலாமே’’ என்று சுவாரஸ்யமாக விளக்குவார்கள் சான்றோர்கள்.

சாப விமோசனம் அருளும் தலம்
இந்திரன் அகலிகைமீது மோகங்கொள்ள, அதன் காரணமாக கெளதம முனிவரால் அவன் சபிக்கப்பட்ட கதை நாமறிந்ததே. அந்தச் சாபத்துக்கு விமோசனம் தேடிய இந்திரன் இங்கு வந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சகஸ்ரலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு அருள் பெற்றானாம்.

kalayaarkovil_urchavar

அவன் மட்டுமன்றி அவனுடைய வாகன மான வெள்ளை யானை, ஆதிசேஷன், வருண பகவான் ஆகியோரும் இந்தத் தலத்துக்கு வந்து சிவ வழிபாடு செய்து அருள்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது.
யானைமடு தீர்த்தம்
நந்தி தேவரால் ஏற்பட்ட சாபம் தீர தேவேந் திர வாகனமான வெள்ளை யானை இங்கு வந்து வழிபட்டது. அப்போது, அந்த யானை தனது தந்தத்தால் தரையைக் கீறி உருவாக்கிய தீர்த்தம் இது.
அக்கா மடு, தங்கச்சி மடு, யானை மடு ஆகிய மூன்று அடுக்குகளாக அமையப்பெற்றுள்ள இந்தத் தீர்த்தத்திலிருந்தே மூன்று மூலவர்களுக்கு மான அபிஷேக நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ராமன் தமது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்தத் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டாராம். வேதகன் என்ற அந்தணரும் இதில் நீராடி தனது பேயுரு நீங்கப்பெற்றாராம்.
கோபுரம் சொல்லும் திருக்கதை!
18-ம் நூற்றாண்டில் மருது பாண்டிய சகோதரர்களால் கட்டப்பெற்றது, இங்குள்ள ராஜகோபுரம். உலகிலேயே இதுபோன்ற நேர்த்தியான கோபுரம் வேறெங்கும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு கலைநயத்தோடு கடப்பட்டுள்ளது. இதன் உயரம் 155.5 அடி, அகலம் 93 அடி ஆகும். சின்னமருது தினந்தோறும் இந்த ராஜகோபுரத்தின் மீது ஏறி நின்று மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைத் தரிசித்து வணங்கி விட்டுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவாராம்.

kalayaarkovil2

இந்தக் கோபுரத்தின் மீது அளப்பரிய பற்றுக் கொண்டவர்கள் மருது சகோதரர்கள். இதையறிந்த வெள்ளையர்கள், `குறிப்பிட்ட நாளுக்குள் சரணடையாவிட்டால் கோபுரத்தைத் தகர்ப்போம்’ என அறிவித்தார்கள். கோபுரத்தைக் காக்க வேண்டி மருது சகோதரர்கள் வந்துசேர்ந்தார் கள்; வெள்ளையர்களால் பிடிக்கப்பட்டு, திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள் என்பது வரலாறு.
2015-ம் ஆண்டு தீ விபத்தொன்று நிகழ்ந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி ராஜ கோபுரங்களுக்கு வர்ணம் பூச ஏதுவாக தட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் மீது தீப்பொறி விழ, பெரியளவில் தீப்பற்றிக் கொண்டது.
வெகுநேரம் தீயை அணைக்க முடியாமல் திணறிய ஊர்மக்கள், எங்கே பெருந்தீயால் கோபுரம் பாதிக்கப்படுமோ என்று கலங்கிய தருணத்தில் மழை பெய்யத் துவங்கியது. அந்த மழை வலுத்து மூன்று மணி நேரம் விடாமல் பெய்ய, தீ அணைந்ததாம். சரித்திரச் சிறப்புமிக்க கோபுரத்தைக் காளீஸ்வரரே காப்பாற்றி அருளினார் என்பது, உள்ளூர் மக்களின் நம்பிக்கை!

இறை நாமம் உதவும்!
முட்செடிகளைத் தின்பதில் ஒட்டகத்துக்கு அவ்வளவு ஆனந்தம்! முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும், அந்த ரத்தச் சுவை அந்த முள்ளிலிருந்துதான் வருகிறது என்று எண்ணிக்கொள்ளுமாம் ஒட்டகம்.
அதுபோல் உலகில் மனிதன் எவ்வளவோ துயரங்களை அனுபவித்தாலும் அவற்றை மறந்துவிட்டு, மீண்டும் பழைய போக்கிலேயே வாழத் தலைப்படுகிறான். இதுதான் மாயை! இதுவே அவனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது. மாயையை அழிக்கவேண்டும். அதற்கு பகவானின் திருநாமமே உதவி செய்யும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*