திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்காஎன்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன்ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான “நீருக்கு” உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.
இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீற்றைகூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் உள்ளே மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடைக் காலத்திலும் , காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான கோயில் மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி அம்மன் காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான நீர்லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

தல வரலாறு
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இப்பகுதி இருந்தது. இக்காட்டில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் தங்களில் யார் அதிகமாக சிவ சேவை புரிகிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.
இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. இத்திருக்கோவில் ஐந்து பிரகாரங்களை கொண்டது.

“ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், நூறு கால் மண்டம், நவராத்திரி மண்டபம், சோமஸ்கந்தர் மண்டபம்”
இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீற்றை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் உள்ளே மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடைக் காலத்திலும் , காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான கோயில் மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி அம்மன் காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான நீர்லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்
இத்திருக்கோவிலில் இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னை அகிலாண்டேஸ்வரியால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுகிறது. திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகத் தெரியும்படி உள்ளது. இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருந்தகையார் “செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே” என எடுத்து ஆண்டுள்ளார். இத்தலத்தின் சிறப்பையும் சிவபெருமான் பற்றியும் திருநாவுக்கரசர்தேவாரத்தில் பாடியுள்ள பதிகம்,
“துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே”
“~அப்பர்”
என் பொன்போல்வான் என்றும், ஈசன் என்றும், இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால், துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின். இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக. ஒருமுறை காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம் ஒன்று, திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு சிவனுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தை சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு போற்றுகிறார்,
“தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே”
“-திரு சுந்தரமூர்த்தி நாயனார்”
சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது அவனது முத்தாரம் காவிரி நதியில் நழுவிப்போக, அஃது இறைவனுக்கு சென்று சேரட்டும் என்றான். அஃது அவ்வாறே மறுநாள் சுவாமிக்குத் திருமஞ்சனம் எடுக்கும் குடத்தில் புகுந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது இறைவன் திருவுருவிற்கு அணியாரமாயிற்று என்பது வரலாறு.

பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்” உண்டானது. இத்தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் உடன் வருவதாக கூறினார். சிவபெருமான் அம்பாளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அம்பிகையையை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!’‘ என்றார். இதற்கு சிவனும் உடன்பட இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு பங்குனி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்ச்சவத்தின் போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்திற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி அளிக்கின்றனர். பிரம்மா தியானம் செய்யும் பொழுது என்பதால், அப்போது மேளதாளங்கள் இசைக்கப்படுவதில்லை. சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை தேவி அருளுவதால் “அகிலாண்டேஸ்வரி” என்றழைக்கப்படுகிறாள். அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம்.
மாணவியாக அம்பாள்

இதேபோல் ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, தேவி மாணவியாக இருந்து கற்றறிந்தாள்.
நவ துளை ஜன்னல்

ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும்அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை எடுத்துணர்த்துகிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி மாத பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.
இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அம்பாளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை போட்டபடியே கோயிலுக்குள் சென்றாள். வேதியரிடம், “நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன்,” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். “கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,” என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.
திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறும் (ஆடி வெள்ளி-ஐந்து வெள்ளிகள்) ஆடித் தெப்பத் திருவிழா, நவராத்திரி, தைத்தெப்பம், பங்குனி மாதத்தில் தேர்த்திருவிழா, பஞ்சப்பிரகார திருவிழா ஆகியவை விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.
இக்கோயில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, பின்பு மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைதிறந்திருக்கும். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச தினங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து நடைத்திறந்திருக்கும். இங்கு உச்சிகால பூஜைகள் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும். திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். திருச்சியில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் திருவானைக்காவல் உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்தும் செல்லலாம்.

Leave a Reply