பிறக்க முக்தி தரும் தலம்.

thyagaraja-temple-in-tiruvarur
thyagaraja-temple-in-tiruvarur

திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.

பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.
கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.
முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.
சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம், முக்தியளிக்கக்கூடிய தலம். மற்ற சப்த விடங்கத் தலங்கள்: (1) நாகைக்காரோணம், (2) திருநள்ளாறு, (3) திருமறைக்காடு, (4) திருக்காறாயில், (5) திருவாய்மூர் மற்றும் (6) திருக்கோளிலி ஆகியவையாகும்.
திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.
சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.
சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.
விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.
தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம்.
திருவாரூர்க் கோயிலுக்குள் சென்று விட்டால், குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியேயில்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கும் சிறப்பை உடைய தலம்.
எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.
என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.

தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும், பிரதானமானதுமாகும். திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. நான்கு புறமும் கோபுரஙளையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. கோயில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி , செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்) பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். ஒன்பது கிரகங்களும் தியாகராஜ சுவாமிக்கு கட்டுப்பட்டு ஓரே வரிசையில் தென் திசையில் தியாகராஜசுவாமி சன்னதி நோக்கி அமைந்துள்ளதை இத்திருத்தலத்தில் மட்டும் தான் காணலாம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.

ஆலயத்திலுள்ள சிறப்பு வாய்ந்த சந்நிதிகள்:
வன்மீகநாதர் மற்றும் தியாகராஜர் சந்நிதிகள்:லன்மீகநாதர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடபால் அதிகார நந்தி காட்சி. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர், சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இசந்நிதிக்கு வலதுபுறம் இத்தலத்தின் பிரதான மூர்த்தியான தியாகராஜர் சந்நிதி உள்ளது. தியாகராசாவின் பக்கத்திலுள்ள அம்மை “கொண்டி” எனப்படுபவள். தியாகேசர் சந்நிதியில் வலதுபுறம் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத் தான் நாடொறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம். தியாகராசாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.

 

கமலாம்பிகை சந்நிதி: கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும்,பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும்.ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம்.

நிலோத்பலாம்பாள் சந்நிதி: இங்கே அம்பாள் இரண்டு கரத்துடன் ஆதிசக்தியாக காட்சி தருகிறார். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புடன் அம்பாள் காணப்படுகிறார். அம்பாளுக்கு இடது புறமாக ஒரு பெண் நின்ற நிலையில் ஒரு சிறுவனை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள். அவன் தலை மீது அம்பாள் தன் இடது கையை படிமானமாக வைத்துக் கொண்டிருப்பது போல, ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவம் வேறுஎங்கும் காண இயலாதது, கருவறையில் பள்ளியறையும் அமைந்து தனித்தன்மை பெற்று விளங்குகிறது

ரௌத்திர துர்க்கை சந்நிதி: அருள்மிகு ரௌத்திர துர்க்கை அம்பாள் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் நெடுநாட்களாக திருமணத்தடையை நிவர்த்திசெய்யவே ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்வோருக்கு குறைதீர்த்து அருள்பாலிக்கின்றாள். ரௌத்திர துர்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் அhச்சனை செய்து விஷேச பலனை அடையலாம்.

ரண விமோசனர் சந்நிதி: ரண் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத, வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் ரண விமோசனர் என அழைக்கப்படுகின்றாh.; இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுதல் மிகவும் பலனைக் கொடுக்கும். பக்தர்களின் உப்பு காணிக்கையினால் பிரகாரம் சற்று அரித்து இருந்தாலும் லிங்கம் எந்தவித பாதிப்பும் இன்றி ரண விமோசனர் விளங்குகின்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*