வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்

working-women

வேலைக்குச் செல்லும் சில பெண்கள், காலை நேரத்துப் பரபரப்பை குறைக்க, முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்துக்கள் உள்ளன. சமைப்பதற்கு வேகு நேரத்துக்கு முன்பே காய்களை நறுக்கி, ஃப்ரீட்ஜில் வைப்பதால், இந்த வைட்டமின், நார்ச்சத்துகள் பெரும்பாலும் காற்றில் கலந்துவிடும். மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ஏற்கெனவே வைத்திருக்கும் சில பொருள்கள், எளிதில் பாக்டீரியாவை பரப்பும். எனவே, நறுக்கிய காய்களிலும் பாக்டீரியா பரவலாம். அதனால், காய்களை இரவே நறுக்கிவைக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.

கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களில் பலர், குழந்தையைப் பக்கத்தில் உள்ள வீட்டார்களிடம் ஒப்படைக்கிறார்கள். இது, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள நெருக்கத்தை உடைக்கும். தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துவரும் சூழலையும் மனதில்கொள்ள வேண்டும். எனவே, தனது அல்லது கணவனின் தாய் போன்ற நெருங்கிய உறவினரிடம் ஒப்படையுங்கள். முடியாதபட்சத்தில், தரமான குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பது நல்லது.

அலுவலகத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சில பெண்கள் எப்போதுமே மேக்கப்பில் இருப்பார்கள். அந்த அழகு சாதனப் பொருள்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முறையான வழிகாட்டல் இல்லாமல், இஷ்டத்துக்குப் பயன்படுத்துவார்கள். இது, சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தோல் மருத்துவரை அணுகி, உங்களின் ஸ்கினுக்கு ஏற்றதைத் தேர்வுசெய்து, சரியான அளவில் பயன்படுத்துங்கள். அழகுடன் ஆரோக்கியமும் இருக்கும்.

பல பெண்கள் அலுவலக வேலையையும் வீட்டு வேலையையும் சமன் செய்வதில்தான் பல இடையூறுகளைச் சந்திக்கின்றனர். சரியான திட்டமிடலுடன் செயல்படுவதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். அலுவலகப் பணியை வீட்டில் பார்க்கும்போது, உங்கள் குழந்தை மற்றும் கணவருக்குச் செலவிடும் நேரத்தையும் அன்பையும் இழக்கிறீர்கள் என்பதை மனதில்கொண்டு, திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

அலுவலகம் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், மாதவிடாய் நாள்கள். அதிக வேலை, ஆண்களுக்கு மத்தியில் பணிபுரியும் சூழல் போன்றவற்றால், நாப்கின்களை கழிப்பறைக்கு எடுத்துச்செல்லத் தயங்கி, மணிக்கணக்கில் மாற்றாமல் இருப்பார்கள். இது, தொற்றுநோய், சரும அலர்ஜி போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்களில் 90% பேர், அலுவலகத்துக்கு போடும் துணிகளைத்தவிர மற்ற நாள்களில் பயன்படுத்திய துணிகளை ஒரு கூடையிலோ, வீட்டின் ஓரத்திலோ போட்டு வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்திய ஆடைகளில் வியர்வையின் காரணமாக பாக்டீரியா, கிருமிகள் இருக்கும். இது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்களுக்குக் கெடுதல் ஏற்படும்.

சில பெண்கள் அலுவலகத்தில் பாலியல் சீண்டல்கள், கேலிகளுக்கு ஆளாகலாம். இதற்கு ஆரம்பத்திலே சரியான பதிலடி கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவித்து விஷயத்தை முடிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*