கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்

‘நகரேஷு காஞ்சி’ என்று புராணத்திலும் கோயில்களின் நகரம் என இன்றும் கொண்டாடப்படும் காஞ்சி மாநகரில் நடுநாயகமாக தேவி எழுந்தருளியிருக்கும் ஆலயமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

தல வரலாறு :

Kanchipuram

முன்னொரு காலத்தில் கயிலை மலையில், ஒளிமயமான தூய மணிமண்டபத்தில், முதன்மைப் பொருந்திய சிங்காதனத்தின் மீது, தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார். தாருகன் அழிவுக்குப் பின்னர் ஈசனும், தேவியும் கயிலை மலையில் தங்களுக்கு என அமைந்த ஏகாந்த மண்டபத்தில் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தேவி விளையாட்டாக ஈசன் முதுகுப்புறம் வந்து அவருடைய கண்களைத் தன் இரு கரங்களில் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது. எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில் நின்றது. யாகங்கள் தடைப்பட்டன. தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன. தெய்வ வழிபாடு அறவே ஒழிந்தது. உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது. மறை நூல்கள் மறைந்தன. இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.

தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து சூழ்ந்ததோ? எனப் பதைபதைத்து சப்தமிட்டனர். இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது. உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.

சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது. அப்பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார். அதற்கு வழியையும் கூறினார். தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.

அன்னை இறைவனிடம் விடைபெற்று முதலில் காசி நகரத்தை அடைந்து, விஸ்வநாதரைப் பணிந்து வழிபட்டு, பின்பு தொண்டை நாட்டில் அமைந்துள்ள காஞ்சியை அடைந்த அன்னை, காஞ்சியில் உள்ள சிவத்தலங்களை முறையாகத் தரிசித்துக் கொண்டு திருவேகம்பத்தை அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரைக் கண்களால் கண்டனர். அதன் பிறகு அன்னை பிலாகாசத்தை அடைந்த 32 அறங்களைச் செய்து தவம் இயற்றி, பின்பு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது புராண வரலாறு.

தலச்சிறப்பு :

உலக நாயகியான காமாட்சி அன்னை எழுந்து அருள் புரியும் மண்டபம் காயத்திரி மண்டபம் என அழைக்கப்படுகிறது. அம்பிகை அச்சந்நிதியில் தென்கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். அமர்ந்த திருக்கோலத்தில், சுகாசனயோகத் திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலான படைக் கருவிகளைக் கரங்களில் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்து கொண்டுள்ளார்.

kamakshi_amman

தெய்வங்களின் பொற்பாத தரிசனத்தை பக்தர்களுக்கு அளிக்கும் ஆலயங்கள் அரிது. அப்படிப்பட்ட அம்பிகையின் பாத தரிசனத்தை பக்தர்களுக்கு வழங்கும் ஆலயமாகக் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. பாத தரிசனத்தின் பெருமையை சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் மிகவும் விரிவாக, மும்மூர்த்திகளும் வழிபடும் ஆதி சக்தி சொரூபமாக தேவி விளங்குவதை பார்க்க முடியும் என்கிறார் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் குருக்கள் நடராஜ சாஸ்திரி.

ஜெய ஸ்தூபியும் ஸ்ரீ சக்கர வழிபாடும் :

புராண காலத்தில் பண்டகாசுரன் என்னும் அரக்கனை சிறுமி வடிவத்தில் தோன்றி சம்ஹாரம் செய்து பின், காமாட்சி அன்னையாக பிரத்தியட்சம் தரும் ஆலயம் இது. அம்பிகை, சிறுமியின் வடிவத்தைத் தாங்கி பண்டகாசுரனை சம்ஹாரம் செய்த நிகழ்வை இன்றைக்கும் சொல்கிறது, ஆலய வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விஜயஸ்தம்பம்.

காமாட்சியின் கோபக் கனலை தணிக்கவே இந்தக் கோயிலில் ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சக்கரத்துக்கே அபிஷேகம், வழிபாடு அர்ச்சனை எல்லாம் நடைபெறுகின்றன என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.

மகா கும்பாபிஷேகத்திற்காகத் தொடங்கிய திருப்பணிகளின் போது பல வரலாற்றுப் பெருமைகளும் பல சாசனங்களின் மூலமாகக் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் திருக்கோயிலின் ஸ்ரீ கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி.

“ஆலயத்தில் இருக்கும் காயத்ரி மண்டபம், விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது என்றுதான் இதுவரை நினைத்துவந்தோம். ஆனால் இது சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டிருப்பதை அறிவிக்கும் ஒரு சாசனம் இந்த கும்பாபிஷேகப் பணிகளின்போது கிடைத்துள்ளது. அதோடு 7- ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் கிடைத்திருக்கிறது.

ராஜராஜ சோழன் காலத்து சாசனம் ஒன்றும் கிடைத்துள்ளது. `காமக்கோட்ட நாச்சியார்’ என்றே அந்தச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது. அதேபோல் `ஒரு அடிக்கு ஒரு அடி’ அளவுள்ள கல் கிடைத்தது. அவ்வளவு பெரிய கல்லைப் பயன்படுத்திக் கட்டிடங்களை அமைக்கும் முறை மிகவும் புராதன முறை. தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்கள் இதன் பழமையை முறையாக வெளிப்படுத்திச் சொல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த சாசனங்களைக் கொண்டு பார்க்கும்போது, வரலாற்று ரீதியாக மாலிக்காபூர் இங்கு வருவதற்கு முன்பாகவே இந்தக் கோயிலின் கட்டிடம் இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு அதிகச் சான்றுகள் கிடைத்துள்ளன” என்கிறார் திருக்கோயிலின் ஸ்ரீ கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி.

24 அட்சரம் 24 தூண்கள் :

kamakshi-amman-temple

பால உருவமாக அம்பாள் அவதாரம் செய்த ஸ்தலம் இது. காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. அம்பாள் காட்சி அளிக்கும் காயத்ரி மண்டபம், 24 தூண்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. இன்றைக்கும் அம்பாள் நித்ய விஸ்வரூப தரிசனம் அளிக்கும் ஸ்தலம் இது. அதிகாலையில் கோ பூஜைக்குப் பின்தான், ஆலயத்தின் அன்றாடப் பணிகள் கோயிலில் தொடங்கப்படும். ஏனென்றால் முப்பத்து முக்கோடி தேவர்களும் இன்றைக்கும் அம்பாளை இந்த ஆலயத்தில் வழிபடுவதாக ஐதீகம்.

திருமணமும் குழந்தைப்பேறும் :

காமாட்சிக்கு முன்னால் சாற்றிய மாலையை திருமணமாகாத ஆண், பெண்ணுக்கு அணிவித்தால் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு நிர்மால்ய மாலை என்று பெயர்.

காஞ்சி காமாட்சி ஆலயம் சந்தான விருத்தி ஸ்தலமும்கூட. தசரதரின் குல தெய்வம் காமாட்சி என்பதால் புத்திரகாமேஷ்டி யாகத்தை இங்கு நடத்தியதன் பலனாகத்தான் ராம, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் பிறந்தனர் என்கிறது புராணம். சந்தான சம்பம் என்று நாபி விழுந்த இடம் உள்ளது. அதனால் இதை நாபிஸ்தலம் என்றும் கூறுவார்கள். இந்த சந்தான சம்பத்தை வணங்கிவிட்டு, அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பவுர்ணமியில் தீர்த்தம் :

பவுர்ணமிதோறும் இங்கு நடக்கும் நவா வர்ண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இரவு 10 முதல் 12 மணிவரை நடக்கும் நவா வர்ண பூஜைக்கு பக்தர்கள் முன்னதாக சங்கல்பம் செய்துகொண்டு வர வேண்டும். அன்றைக்கு மட்டுமே பூ, குங்குமத்துடன் தீர்த்தமும் பிரசாதமாக அளிக்கப்படும். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் மட்டும்தான் தீர்த்தம் அளிப்பார்கள். இந்த ஆலயத்திலும் பவுர்ணமி அன்று நடக்கும் நவா வர்ண பூஜையின்போது தீர்த்தம் அளிக்கப்படும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்புகளில் அம்பாள் தங்க ரதத்தில் தரிசனம் அளிப்பாள். இதுவும் காமாட்சி கோயிலில் மிகவும் விசேஷமாக நடக்கும். மூன்று கால அபிஷேகம் நடக்கும். மாசி மக உற்சவமும் வெகு விமரிசையாக நடக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*